'கோல்டன் பாம்' விருதுக்கான பட்டியலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்த இந்திய திரைப்படம்!
'கோல்டன் பாம்' விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்' எனும் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 14ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த விழாவின் தொடக்கமாக 'தி செகன்ட் ஆக்ட்' திரைப்படம் திரையிடப்படுகிறது.
இதையும் படியுங்கள் : இன்று ரூ.640 உயர்ந்த தங்கம்! ஒரு சவரன் 55,000-ஐ நெருங்குவதால் அதிர்ச்சி!
இந்நிலையில், கேன்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த ஆண்டிற்கான திரைப்பட விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் அதிகாரபூர்வ பட்டியலை விழாக் குழுவினர் வெளியிட்டனர். இந்த பட்டியலில் இந்திய வம்சாவளி பிரிட்டன் இயக்குநரான சந்தியா சுரியின் 'சந்தோஷ்' திரைப்படம் உள்பட 14 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 'கோல்டன் பாம்' விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்' எனும் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படமானது கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப்பகுதியை எதிர்கொள்ளும் 2 செவிலியர்கள், தங்களின் கனவை நனவாக்கிக் கொள்கின்றனர் என்று கற்பனைக் களத்துடன் கூடிய பயணக் கதையாகும்.
முன்னதாக, கடந்த 1983 ஆம் ஆண்டு பழம்பெரும் இயக்குநர் மிரினால் சென் இயக்கிய 'காரீஜ்' திரைப்படம் 'கோல்டன் பாம்' விருதுக்கான போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 1946 ஆம் ஆண்டு வெளியான சேத்தன் ஆனந்தின் நீச்சா நகர் திரைப்படம் மட்டுமே கேன்ஸ் திரைப்பட விழாவில் உச்ச விருதை வென்ற ஒரே இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.