உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
இன்று நடைபெறும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை இந்தியா 1983, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளது. நியூஸி. ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதலிடத்தில் இருந்த நியூஸி. தட்டுத்தடுமாறி 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்தியா 9 லீக் ஆட்டங்களிலும் வென்று தகுதி பெற்றது.
மும்பையில் வாங்டே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதுபோக அணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரோஹித் தெரிவித்துள்ளார். மேலும் இரு அணியிலும் எந்த மாற்றம் இல்லை என்பதால் கடைசி போட்டியில் விளையாடிய வீரர்களே களம் இறங்க உள்ளனர்.