" காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை இந்தியா முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் " - ஈரான் அதிபர் ரைசி
" காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை இந்தியா முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் " என ஈரான் அதிபர் ரைசி இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியின் மூலம் உரையாடியுள்ளார்.
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2-வது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்தார்.
இதேபோல காஸா நகருக்கு வடக்கே ஐநாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சில தினங்களுக்கு முன்பு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் காயமடைந்தனர். மேலும் காஸா நகரில் உள்ள நாசர் மருத்துவமனையின் வாயிலில் இன்று நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி திங்கள் கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசியில் உரையாடினார். இந்த தொலைபேசி உரையாடலின்போது காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் ஆக்கிரமிக்கும் சியோனிச இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள பாலஸ்தீன மக்களின் நடத்தி வரும் போராட்டத்தை அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.