அஜித் தோவல் ரஷ்யா சென்றது ஏன்? மத்திய அமைச்சர் #SJaishankar அளித்த அப்டேட்!
ரஷ்யா- உக்ரைன் போர்நிறுத்த திட்டத்தோடுதான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனிடையே ரஷ்யா, உக்ரைனுக்கு சமீபத்தில் சென்ற பிரதமர் மோடி, இருதரப்பும் பேச்சு வாயிலாக போருக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில் ரஷ்யாவும், உக்ரைனும் தங்கள் மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஜெர்மனி வெளியுறவுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் ஆலோசனை வழங்க இந்தியா தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாகவே பிரதமர் மோடி முன்மொழிந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்துடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யா சென்றுள்ளார். நிச்சயம், இரு நாடுகளிடையே அமைதியான சூழல் நிலவ இந்தியா முயற்சிக்கும், எனக் கூறினார்.