'கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை' - இலங்கை அமைச்சர் பேட்டி!
'இலங்கையிடம் இருந்து கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை' என இலங்கை மீனவத் துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கச்சத்தீவு இந்தியாவால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவார்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
இதையும் படியுங்கள் :“இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
இதுதொடர்பாக, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது :
"இந்தியாவில் தேர்தல் சமயம் என்பதால் கச்சத்தீவு குறித்த குரல்களும் அதற்கு பதிலடிகளும் எழுவது வழக்கமான ஒன்று தான். கச்சத்தீவு பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க வரக்கூடாது என்பதற்காகவும் அப்பகுதியின் வளத்தை இலங்கை உரிமைக் கோர கூடாது என்பதற்காகவும் கச்சத்தீவைத் திரும்ப பெற இந்தியா முயற்சிக்கலாம்.
1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு மீனவர்களும் இருநாட்டு கடல் எல்லையில் மீன் பிடித்து கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் 1976-ஆம் ஆண்டு மறுஆய்வு செய்யப்பட்டு, திருத்தப்பட்டது. அதன்படி, இருநாட்டு மீனவர்களும் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்துள்ள மேற்கு கரைப் பகுதி கச்சத்தீவை விட பரப்பளவில் 80 சதவீதம் பெரியது. 1976-ஆம் ஆண்டு மறுஒப்பந்தத்தில் அப்பகுதியை இந்தியா பெற்றது. எனவே, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவைத் திரும்ப கோருவதற்காக இந்தியாவில் எழும் குரல்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை கட்டுப்படுத்துமாறு உள்ளூர் மீனவர்களிடமிருந்து தொடர் அழுத்தம் பெறுகிறோம்"
இவ்வாறு இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.