"இந்தியா தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது" - #ManmohanSingh மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, தற்போதைய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார். இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை இழந்துள்ளது. அவர் எளிமையான இடத்தில் இருந்து மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதி அமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றிய அவர், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். நாடாளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.
மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத்தின் முதலமைச்சராகவும் இருந்தபோது, நானும் அவரும் அடிக்கடி உரையாடினோம். ஆளுமை தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் தெரியும். துக்கமான இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுடன் உள்ளன”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.