“நாடு கடந்த 10 வருடங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது!” - நடிகை ராஷ்மிகா மந்தனா!
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.
நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடலோடு நிலத்தை இணைக்கும் நாட்டின் மிகப்பெரிய பாலமான அடல் சேது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை இல்லையெனில் நிறைவேறியிருக்காது என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
“அடல் சேது பாலத்தில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாலத்தால் என்னுடைய 2 மணி நேர பயணம் 20 நிமிடங்களாக முடிந்தது.இது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒன்று சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை. மும்பையிலிருந்து நவி மும்பைக்கு எளிதாக பயணம் செய்ய இந்தப் பாலம் உதவுகிறது. கடந்த 10 வருடங்களில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உள்ள உள்கட்டமைப்பு, திட்டங்கள் இவையெல்லாம் கடந்த 7 ஆண்டுகளில் நடந்தவை என அறிந்தேன். இந்தியா எங்கும் நிற்க தேவையில்லை. இந்தியாவில் இது சாத்தியமில்லை என யாராலும் சொல்ல முடியாது” என தெரிவித்திருந்தார்.