"2027-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்" - மத்திய நிதியமைச்சகம்!
அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் 'இந்தியப் பொருளாதாரம்: ஒரு சீராய்வு' எனும் தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "நிதித்துறையில் தற்போது செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதாரம் வரக்கூடிய ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் ; 2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!
இதையடுத்து, அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும். மேலும் 2030 - ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி மற்றும் 7 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தியாக வளர்ச்சியடையும். மேலும், தற்போதைய சீர்திருத்தங்கள் தடைபடாமல் தொடர்ந்தால், 2047 ஆம் ஆண்டுக்குள் 'வளர்ந்த நாடு' எனும் இடத்தை நாம் அடைய முடியும். இந்தியப் பொருளாதாரம் 2024 ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் அல்லது அதற்கும் மேலான வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, மத்திய மாநில அரசுகளின் முழுமையான பங்கேற்பும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.