மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இளம் ஸ்டிரைக்கர் தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.
முன்னதாக லீக் சுற்றில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த விருதுகளை வென்ற நிலையில், தற்போது இந்தியா மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இதையும் படியுங்கள் : காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில்,
"இது ஒரு அபாரமான சாதனை. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற எங்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் போட்டியின் போது சிறப்பாக விளையாடினர். அவர்களின் வெற்றி பல வரவிருக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்"
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.