#WTCFinal | இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா?
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 62.82 சதவிகிதத்திலிருந்து 58.33 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் அதன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது.
இதையும் படியுங்கள் : Neomax மோசடி வழக்கு | பாதிக்கப்பட்டவர்கள் நவ.15ம் தேதி வரை புகார் அளிக்கலாம் – பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு!
இந்நிலையில், வருகிற நவம்பர் 22ம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த 5 போட்டிகளில் இந்திய அணி கண்டிப்பாக 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோற்றால் கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க மிகவும் குறைவான வாய்ப்பே இந்திய அணிக்கு உள்ளது. இதனால், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.