“இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது!” - டி.ஆர்.பாலு பேட்டி
இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டி.ஆர்.பாலு எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது டி.ஆர்.பாலு கூறியதாவது:
எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக விவாதித்தோம். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள், வேட்பாளர்கள் செயல்பாடுவது தொடர்பாக விவாதித்தோம். மேலும் இந்த தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியடையும்.
வாக்கு எண்ணிக்கை அன்று ஏற்டும் பிரச்சனை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆகியவை குறித்து ஆலோசித்தோம். வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் நடவடிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் 4ம் தேதி அல்லது 5ம் தேதி காலை டெல்லியில் இருக்க வேண்டும் என ஆலோசித்து முடிவு செய்தோம்.
295 இடங்களில் வெற்றி பெறும் என மக்களின் கருத்து அடிப்படையில் கூறுகிறோம். இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யவில்லை. இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. ஊடகங்களுக்கு தான் பிரச்சனை. கட்சி வாரியாக வெற்றி பெற்ற விவரங்கள் உடனடியாக சேகரிக்கப்பட்டு அது குடியரசு தலைவரிடம் உடனடியாக கொடுப்போம்.
பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை குறைவாக இருக்கும் பட்சத்தில் ஆதரவு கோரினால் தி.மு.க ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு மோசமான ஆட்சியை தந்த பா.ஜ.க.வை அகற்ற வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் லட்சியம். அவ்வாறு இருக்கும் போது பா.ஜ.க.விற்கு எக்காரணம் கொண்டும் திமுக ஆதரவு தராது.
மேலும் பா.ஜ.க.வுக்கு அந்த பயம் வேண்டாம், ஏனெனில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் அதனால் தான் அவர் கலந்து கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் மோசமான ஆட்சி, ஊழல் , மக்கள் புறக்கணிப்பு, பணக்காரர்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல காரணங்களால் பா.ஜ.க படுதோல்வி அடையும். இவ்வாறு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.