For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் | முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!

01:52 PM Oct 17, 2024 IST | Web Editor
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்   முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
Advertisement

நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறது.

Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி நேற்று பெங்களூருவில் தொடங்க இருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதால் பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைத் தெரிந்தே முதலில் பேட்டிங் செய்த கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த விராட் கோலி டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த சர்பராஸ் கானும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதனால் 10-3 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவுக்கு நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வாலை 13 (63) ரன்களில் அவுட்டாக்கிய வில்லியம் ஓ’ரோர்க்கே அடுத்ததாக வந்த கேஎல் ராகுலையும் டக் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜாவும் டக் அவுட்டானார். அதனால் இந்தியா 50 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஸ்வினும் கோல்டன் டக் அவுட்டானார்.

அதே போல மறுபுறம் போராடிய ரிஷப் பண்ட் 20 ரன்களில் அவுட்டானார். இறுதியில் இந்தியாவை 46 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5, வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 50 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி இந்தியா வரலாறு காணாத படுமோசமான சாதனையை படைத்துள்ளது.

அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 1976ஆம் ஆண்டு வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக 81 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். இவை அனைத்தையும் விட 1932 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இந்தியா தங்களின் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து 92 வருட வரலாறு காணாத மற்றுமொரு மோசமான சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் கடந்த 1987ஆம் ஆண்டு டெல்லியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 75க்கு ஆல் அவுட்டானதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். மேலும் 36க்கு ஆல் அவுட், 42க்கு ஆல் அவுட்டை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக இந்தியா தங்களுடைய மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பிட்ச்சை தவறாக கணித்தது இந்த சரிவுக்கு காரணமாக அமைந்தது.

Tags :
Advertisement