#IndependenceDay | ம.பி.யில் தேசிய கொடியுடன் பாலஸ்தீன கொடி ஏற்றியவர் கைது!
மத்திய பிரதேசத்தில் தேசியக்கொடியுடன் பாலஸ்தீன கொடியையும் ஏற்றிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நேற்று (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி நேற்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகம், பள்ளிக் கூடங்கள், வீடுகளில் தேசியக் கொடியை அவமதிக்காத வகையில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள டெய்லர் கடைக்காரர் அவரது கடைக்கு முன் பாலஸ்தீன கொடியை ஏற்றியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய மரியாதையை அவமதிப்பதை தடுக்கும் சட்டம் 1971 கீழ் தேசிய கொடியை அவமதித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் அவரை துணை ஆணையாளர் சிறையில் அடைத்துள்ளார். ஹனீப் கான் (40) தனது கடையை காவி, வெள்ளை, பச்சை கலர் பலூன் மற்றும் மலர்களால் அலங்கரித்திருந்தார். ஆனால், தேசிக்கொடியுடன் பாலஸ்தீன கொடியையும் சேர்த்து ஏற்றிருந்தார். காவல்துறையினர் பாலஸ்தீன கொடியை அகற்றி அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.