இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிச.26) தொடங்கிய நிலையில் டாஸ் வென்று பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா ஐந்து ரன்களில் அவுட் ஆக அதனை அடுத்து சுப்மன் கில் இரண்டு ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து ஜெயஸ்வால் 17 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட் ஆகினர். நிதானமாக விளையாடிய கோலி 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் வரிசையாக விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 208 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்துள்ளது. ராகுல் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று (டிச. 27)தொடங்கியது. அதிகாலையில் பெய்த மழை காரணமாக ஆட்டம் 25 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரில் 2 ரன்கள் சேர்த்த சிராஜ், அதன்பின் கேஎல் ராகுலிடம் ஸ்ட்ரைக்கில் கொடுப்பதில் கவனமாக இருந்தார். மற்றொரு பக்கம் ஸ்ட்ரைக்கில் வந்த கே.எல்.ராகுல் பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். ரபாடா வீசிய ஒரு ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி கேஎல் ராகுல் சதத்திற்கு அருகில் சென்றார்.
தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் கோட்சியே வீசிய ஓவரில் சிராஜ் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த பிரசித் கிருஷ்ணா ஆட்டமிழக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோட்சியே 2 பவுன்சர் பந்துகளை வீச, மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேஎல் ராகுல் மிரட்டலாக ஒரு சிக்சரை விளாசி, தனது 8வது சதத்தை விளாசினார். அதுமட்டுமல்லாமல் சென்சுரியன் மைதானத்தில் கே.எல்.ராகுல் அடிக்கும் 2வது சதம் இன்று அடித்தார்.
அதேபோல் வெளிநாடுகளில் கே.எல்.ராகுல் அடிக்கும் 7வது சதம் இதுவாகும். இதன்பின் பர்கர் வீசிய ஓவரில் 101 ரன்கள் எடுத்து கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அவர் 137 பந்துகளில் 4 சிக்ஸ், 14 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும், பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, இன்றைய நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஐடன் மார்க்ராம் 5 ரன் எடுத்து முகமது சிராஜ் ஓவரில் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டோனி டி ஜோர்ஜி சற்று நிதானமாக விளையாடி 28 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கீகன் பீட்டர்சன் வந்த வேகத்தில் 2 ரன்கள் எடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் தொடங்க வீரர் டீன் எல்கர், டேவிட் பெடிங்காம் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். சிறப்பாக விளையாடி வந்த தொடங்க வீரர் டீன் எல்கர் சதம் விளாசினார். இருப்பினும் மறுபுறம் விளையாடிய டேவிட் பெடிங்காம் 80 பந்தில் அரைசதம் கடந்து 56 ரன்னில் முகமது சிராஜ் ஓவரில் போல்ட் ஆனார்.
பின்னர் களம் கண்ட கைல் வெரைன் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேற 2-ம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் டீன் எல்கர் 140* , மார்கோ ஜான்சன் 3* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டையும் , பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் பறித்துள்ளனர்.