#INDvsENG கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறுமா இங்கிலாந்து!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் மற்றும் இரண்டாம் போட்டிகளில் இந்திய அணி வெற்றியை பதித்துள்ளது.
இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் தொடங்குகிறது. முதல் இரு ஆட்டங்களில் வென்று கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. மறுபுறம் இங்கிலாந்து, ஆறுதல் வெற்றிக்கான முயற்சியுடன் இருக்கிறது.
இந்திய அணியை பொருத்தவரை, நீண்ட நாள்களுக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் சதமடித்து விளாசினார். எனினும், விராட் கோலி வலது முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தில் ஆடவில்லை. பேட்டிங்கில் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், அக்ஸர் படேல் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
பந்துவீச்சில் ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா உள்ளிட்டோர் எதிரணிக்கு சவால் அளிக்கின்றனர். காயத்திலிருந்து மீண்டு களம் கண்டுள்ள முகமது ஷமியும்சிறப்பாக விளையாடி வருகிறார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, முதலில் டி20 தொடரை இழந்து, தற்போது ஒருநாள் தொடரையும் தவறவிட்டிருக்கிறது. எனினும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை அடுத்த இலக்காக வைத்து முன்னேறும் அந்த அணி, இந்த ஆட்டத்தின் மூலம் ஆறுதல் வெற்றி காணும் முயற்சியில் இருக்கிறது.
கேப்டன் ஜாஸ் பட்லர், ஃபில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், ஜேமி ஓவர்டன், சகிப் மஹ்மூத், ஆதில் ரஷீத் ஆகியோர் பௌலிங்கிலும் பலம் சேர்க்கின்றனர். எனினும், காயத்தால் ஜேக்கப் பெத்தெல் விலகியது அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.