IND vs AUS Final 2023 - 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
உலககோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இதில் தொடக்கம் முதலே ரோஹித் சர்மா அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட எதிர்முனையில் இருந்த சுப்மன் கில் 7 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். இவரும் ரோஹித் சர்மாவும் சீராக பவுண்டரிகளை பறக்கவிட்ட நிலையில் அணியின் ரன்கள் உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், 9 ஓவர்கள் முடிந்த நிலையில், மேக்ஸ்வெல் பந்தில் காச் கொடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். இவர் 3 சிக்ஸ் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 31 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும் 4 ரன்களுக்கு வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலியும், கேல்.ராகுலும் மிகவும் பொறுமையாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழுவதை தவிர்க்க முயற்சி செய்தனர். இந்நிலையில், வெற்றிகரமாக அரை சதத்தை கடந்த விராட் கோலி, 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவரை தொடந்து களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதற்குள் 41 ஓவர்கள் நிறைவடைந்தது. அப்போது அரைசதத்தை கடந்து விளையாடி வந்த கே.எல்.ராகுலும் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சூர்யகுமார் யாதவ் களத்தில் இருக்க மறுபுறம் களம் இறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். இறுதியாக 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 240 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது. 2 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து மிட்சல் மார்ஸ் 15 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ரா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7-ஆவது ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பும்ரா பந்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். முக்கியமான வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும் தொடக்க ஆட்டக்காரராக வார்னருடன் களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் நிலைத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவருடன் கை கோர்த்த லபுசேனேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இருவரும் சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் குவிக்க, லபுசேனே 58 ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக 43 ஓவர்களில் 42 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.