IND vs AUS 1st Test: 150 ரன்களில் ஆல் அவுட்... சொதப்பிய இந்தியா!
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 150 ரன்களிலேயே இந்தியா ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை பெறும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெர்த் மைதானத்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகினார். பின்னர் வந்த படிக்கல்லும் டக் அவுட் ஆகினார். தொடர்ந்து விராட் கோலி காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களிலிலேயே அவரும் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. நீண்ட நேரத்திற்கு பின்னர் நம்பிக்கை அளிக்கும் வகையில் கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் ரிஷப் பண்ட் - நிதீஷ் குமார் ரெட்டி ஜோடி இணைந்து 50 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இருவரும் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 150 ரன்களிலேயே ஆல் அவுட் ஆனது.