அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
கோவிட் ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால் கர்நாடகாவில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜேஎன்-1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் கோவிட் ஜேஎன்-1 தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ஷரன் பிரகாஷ் பாட்டீல் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறுகையில், “மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜனவரி 3-ம் தேதி (இன்று) முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும். இருப்பினும், கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நெரிசலான இடங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். முகக் கவசங்களை அணிய வேண்டும். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9 பேருக்கு இதயம், சிறுநீரகம் மற்றும் பிற நோய்கள் இருந்தன. மங்களூரை சேர்ந்த ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தடுப்பூசி போடவில்லை. அதனால் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று கூறினார்.