அதிகரிக்கும் FedEx, TRAI சைபர் மோசடிகள் - #GCP வெளியிட்ட யோகிபாபுவின் விழிப்புணர்வு வீடியோ!
FedEx, TRAI மோசடி குறித்த நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சைபர் கிரைம் மோசடி கும்பல் தொடர்ந்து முதியவர்களை குறிவைத்து மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. குறிப்பாக FedEx, TRAI கொரியர் பெயரில் நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இந்த மோசடி கும்பலானது குறிப்பிட்டவர்களைத் தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்புள்ளது’ எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதிலும் குறிப்பாக ஐ.வி.ஆர் எனப்படும் தானியங்கி செல்போன் அழைப்புகள் மூலம் முதியவர்களை குறி வைத்து இந்த மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. இந்த மோசடி சம்பவத்தில், மும்பை மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் எனக் கூறி பேசுபவர்கள், முதியவர்களை மிரட்டி அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், FedEx, TRAI மோசடி குறித்த நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “FedEx மற்றும் TRAI மோசடிகள் தொடர்பான ஏராளமான புகார்கள் சென்னை காவல்துறை பெற்றுள்ளது. மோசடி செய்பவர்கள் CBI, ED மற்றும் மும்பை காவல்துறையின் அதிகாரிகள் பெயரில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக நடிகர் யோகிபாபுவின் விழிப்புணர்வு காணொளியை கண்டு ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து ஏமாறாமல் உஷாராக இருங்கள்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை FedEx, TRAI மோசடி குறித்த புகாரின் பேரில் ரூ.10 கோடி வரை மீட்கப்பட்டுள்ளதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.