அச்சுறுத்தும் நாய்கள்... 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு - பொது சுகாதாரத்துறை தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிராமப் பகுதி முதல் நகரம் வரை தெரு நாய்களின் தொல்லை பெரும் சவலாக இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாய்கடி பாதிப்பும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நாய்கடி சம்பவங்கள் குறித்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
"2022ஆம் ஆண்டில், 3,65,318 நாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் 4,40,921 நாய்கடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 2022-ஆம் ஆண்டைவிட, 75,603 நாய்க்கடி சம்பவங்கள் என 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த 2 ஆண்டுகளில் 8,06,239 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக, சேலத்தில் 66,132 பேர், வேலூரில் 51,544 பேர், திருச்சியில் 46,549 பேர், சென்னையில் 21,720 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், நீலகிரியில் குறைவான நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன"
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்து! போலீசார் தீவிர விசாரணை!
இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது :
"நாய்க்கடி சம்பவம் மற்றும் தீா்வுக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருகின்றனர். தெருநாய்கள் கருத்தடை பணிகளுக்கு ரூ. 107 கோடியை அரசு செலவழித்து வருகிறது. தெருநாய்கள் கட்டுப்படுத்துதல், நாய்க்கடி சம்பவங்கள் குறைத்தல் ஆகியவற்றுக்கு, ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது"
இவ்வாறு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.