மகாராஷ்டிரா ரேஷன் கோதுமையில் செலினியம் அதிகரிப்பு - இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகபடியான முடி உதிர்வு!
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள18 கிராமங்களில் உள்ள ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு திடீரென முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 300 வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திடீர் முடி உதிர்வால் அப்பகுதி மக்கள் புதியவகை நோய் தொற்று பரவியதாக அச்சமடைந்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறை சார்பில் டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் அப்பகுதியில் ஒரு மாதம் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் அப்பகுதி மக்கள் உட்கொள்ளும் கோதுமையில் உள்ள நச்சுப் பொருட்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அந்த டாக்டர் அளித்த பேட்டியில், “இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வரும் கோதுமை மாதிரிகளை தானேவின் வெர்னி பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த கோதுமை சரக்குகள் அனைத்தும் பஞ்சாபிலிருந்து வந்தவை. மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் 600 மடங்கு அதிக செலினியம் இருப்பது தெரியவந்தது. இந்த அதிகப்படியான செலினியம் உட்கொள்ளுதல் அலோபீசியா நோய்களுக்குக் காரணம்.
பாதிக்கப்பட்ட 18 கிராமங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை ஏற்பட்டுள்ளது.
அறிகுறிகள் தோன்றிய மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் மொத்த முடியும் உதிர்ந்து வழுக்கை ஏற்பட்டுவிடும்” என்று கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் அதிக செலினியம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு குறித்த அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், அதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.