இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரிப்பு: இளைஞர்களை பாராட்டி பிரதமர் மோடி பதிவு!
இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு, நமது இளைஞர்களின் அதிகரித்து வரும் புதுமையான ஆர்வத்தை நிரூபிக்கிறது. இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காப்புரிமைச் சட்டம் 1970 மற்றும் காப்புரிமை விதிகள் 2023 ஆகியவை இந்தியாவில் காப்புரிமைகளுக்கான அமைப்புகளாகும். காப்புரிமை விண்ணப்பங்களைச் செயலாக்குதல், மறு ஆய்வு செய்தல், ரத்து செய்தல் ஆகியவற்றில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள விதிகளின் காரணமாக வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது.
அதன்படி, 2014-15-ம் ஆண்டில் ஆய்வு செய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரமாக இருந்தது. ஆனால் 2019-20-ம் ஆண்டில் அது 80 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.
உலக அறிவுசார் சொத்துரிமை (WIPO) அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டில், சீனா அதிக காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளது. காப்புரிமை அடிப்படையில் இந்தியா உலகளவில் 10ஆவது இடத்திலும், வர்த்தக முத்திரைகள் அடிப்படையில் 8ஆவது இடத்திலும் உள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு, நமது இளைஞர்களின் அதிகரித்து வரும் புதுமையான ஆர்வத்தை நிரூபிக்கிறது. இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும்.” என பதிவிட்டுள்ளார்.