For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

08:53 AM Aug 22, 2024 IST | Web Editor
தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா
Advertisement

கடந்த ஜூன் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 121 கோடியாக அதிகரித்துள்ளது. 

Advertisement

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர்களை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.56 கோடியாக உயர்ந்தது. இதுகுறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த மே மாத இறுதியில் 120.37 கோடியாக இருந்தது. இது, கடந்த ஜூன் மாத இறுதியில் 120.56 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 0.16 சதவீத மாதாந்திர வளர்ச்சியைக் கண்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 19.11 லட்சம் புதிய வயர்லெஸ் வாடிக்கையாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களின் நிகர எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 12.52 லட்சம் அதிகரித்தது.

அந்த மாதத்தில் வோடஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக வயர்லெஸ் பிரிவில் 15.73 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தன. இதில் வோடஃபோன் ஐடியா 8.6 லட்சம் வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் 7.25 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்தன. எம்டிஎன்எல் 3,927 வயர்லெஸ் வாடிக்கையாளர்களை இழந்தது. வயர்லைன் பிரிவில், 4.34 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்களுடன் கடந்த ஜூனில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் 44,611 புதிய வாடிக்கையாளர்களையும் வோடஃபோன், ஐடியா 21,042 கூடுதல் வாடிக்கையாளர்களையும் சேர்த்தன. விஎம்ஐபிஎல் நிறுவனத்தில் 13,996 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்தனர். நாட்டின் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 94 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய மே மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 93.51 கோடியாக இருந்தது. இந்தப் பிரிவில் 48.89 கோடி வாடிக்கையாளர்களுடன் பிரிவில் ஜியோ முன்னிலை வகிக்கிறது.

அதைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் 28.13 கோடி வாடிக்கையாளர்களையும் வோடஃபோன் ஐடியா 12.78 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. கடந்த ஜூன் இறுதியில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement