வெள்ளத்தால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை அதிகரிப்பு!
புயலால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையினை உயர்த்தியுள்ளதாக காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த 2-ஆம் தேதி உருவாகிய மிக்ஜம் புயலால் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.
வரலாறு காணாத இந்த கன மழையால் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருள்கள் என அனைத்தும் வெள்ளத்தில் சேதமடைந்தன.
இவற்றுக்கான நஷ்டத்தை காப்பீட்டில் இருந்து பெற ஏராளமான உரிமையாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களை அணுகினர். மேலும், சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், மோட்டார் காப்பீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வரம்பை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும், பொது காப்பீட்டிற்கான தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும் ஐஆர்டிஏஐ அறிவித்துள்ளது.