நிறுவனங்கள் #IncomeTax கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு… எப்போது வரை தெரியுமா?
நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவ.15ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். மாதந்தோறும் வருமானம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனினும், சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுவதால், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதாவது, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு, அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆன்லைனிலேயே வருமான வரி தாக்கல் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல, வருமான வரி தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்.31ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், மத்திய நேரடி வரிகள் வாரியம் இதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன்படி, நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.