For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வருமான வரி தாக்கல் - கடைசி நாளில் இணையதளம் முடங்கியதால் வரிதாரர்கள் அவதி!

07:21 AM Aug 01, 2024 IST | Web Editor
வருமான வரி தாக்கல்   கடைசி நாளில் இணையதளம் முடங்கியதால் வரிதாரர்கள் அவதி
Advertisement

வருமான வரி தாக்கல் செய்வதற்கான  கடைசி நாளான நேற்று இணையதளம் முடங்கியதால் வரிதாரர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Advertisement

ஆண்டு வருமான வரிக் கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாளாகும்.  கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம்.

அதன்படி கடந்த வாரத்திலிருந்தே அதிகமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளதாக நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.   கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும் வேலையில் சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிலையில் இந்த  நிதி ஆண்டில் இந்த  எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைந்த நிலையில் கடைசி நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான வரிதாரர்கள் வருமான வரியை தாக்கல் செய்தனர். இதனால், வருமான வரி இணையதளம் முடங்கியது.

இதன் காரணமாக, பலர் வருமான வரியை  தாக்கல் செய்வதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். இது குறித்து பலர் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்தனர். " வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இணையதளம் தடுமாறுகிறது. தயவு செய்து, வரும் நாட்களிலாவது தளத்தை மேம்படுத்துங்கள்" என்று பலர் பதிவிட்டனர்.

வருமான வரி இணைய தளத்தை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளதால், இன்போசிஸ் நிறுவனத்தை டேக் செய்து பலர் பதிவுகள் பதிவு செய்தனர்.
காலக்கெடுவுக்குள்  வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், வரிதாரர்கள் சலுகைகள் பெற முடியாது என்பதோடு தாமதமாக தாக்கல் செய்வதற்கு ரூ.5,000 வரையில் அபராதமும் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் பல மாநிலங்களில் கடும் மழை மற்று நிலச்சரிவு காரணமாக கடந்த சில நாட்களாக பலர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் மத்திய அரசு வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்தால் நன்றாக இருக்க்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement