தொடர் மழை : மணிமுத்தாறு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரதான அருவிகளில் ஒன்றாக மணிமுத்தாறு அருவி விளங்குகிறது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழையானது தற்போது தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தவிட்டனர். இந்த தடை தொடர்ந்து 7வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மாஞ்சோலை பகுதியில் தொடர்ந்து கனமழை காரணமாக அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.