ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர்வரிசை கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ‘மஸ்ஜிதே இலாஹி’
பள்ளிவாசல் நேற்று திறக்கப்பட்டது. இவ்விழாவை முஸ்லிம்கள் மட்டுமின்றி
அக்கிராமத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும்
கொண்டாடினர். ஊர் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகள், பஸ்
ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனைத்து மதத்தினரும் விழாவை வரவேற்று பேனர்கள்
வைத்திருந்தனர்.
மேலும், இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை
பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். அதே போல்,
கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை
சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர். சீர் வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அல்பத்ரு வாலிபர் முன்னேற்ற சங்கம் நண்பர்கள் ஆரதழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர்.
பின் குளிர்பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். விழாவையொட்டி 150 கிடா அறுத்து 7 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இவ்விவிழா, அப்பகுதி மக்களிடையே மன நெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.