போதிய பேருந்து வசதியின்மை... 2 மணிநேரம் பள்ளித் திறப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் - அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம் திறப்பதற்காக இரண்டு மணிநேரம் காத்திருக்கும் அவலம் தினசரியாக அரங்கேறி வருகிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சியில் காஞ்சேரிமலை, புதூர் மற்றும் ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமங்களிலிருந்து சோபனாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, வைரி செட்டிபாளையம், கோட்டப்பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினசரியாக பேருந்தில் சென்று பயின்று வருகின்றனர்.
இப்பகுதிகளுக்கு காலை, மாலை என இருவேளைகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 பேருந்துகளே இயக்கப்படுகின்றன. காலை 6.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பேருந்து வந்து செல்வதாக இப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். காலை நேரத்தில் இயக்கப்படும் பேருந்தில் சோபனபுரம் அரசுப்பள்ளிக்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். பள்ளி வளாகம் வழியாக செல்லும் இந்த பேருந்து, பள்ளி அருகே மாணவர்களை இறக்கிவிடாமல், ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு முன்பே இறக்கிவிடுகிறது. இதனால் காலை 9.30க்கு தொடங்கும் வகுப்புகளுக்காக 7 மணிக்கே மாணவர்கள் சென்றுவிடுகின்றனர்.
அங்குச் சென்றபின் தாங்கள் எடுத்துச் சென்ற உணவை சாப்பிட்டு விட்டு சுமார் 2 மணிநேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் போக்குவரத்து துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதும் இந்த அரசு, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, பள்ளி நேரங்களில் பேருந்தை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பொதுமக்களின் மருத்துவம், வணிகம், அலுவலக சம்பந்தபட்ட பயணங்களை கருதி பேருந்து நேரத்தை மாற்றி இயக்கவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் இப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.