’சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாளை முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்’ - தேவசம்போர்டு அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம்
தேதியன்று நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதிலிருந்து இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இதனால் பம்பை, எரிமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் அடைக்கப்பட்டு, பல மணிநேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மகரஜோதி நெருங்கும் நிலையில் சபரிமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை மகர சங்கரம பூஜையும், மாலையில் மகர ஜோதி தரிசனமும் நடக்கின்றன. இதனையொட்டி, 13ஆம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது.
பந்தளம் மன்னர் குடும்பத்தில், ஜோதி திருநாள் அம்பிகா தம்பிராட்டி சில
நாட்களுக்கு முன்பு காலமானார். இதனையடுத்து, பந்தளம் வலியா சாஸ்தா கோயில்
அடைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறாது. பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பவனியில் இடம் பெற மாட்டார்கள்.
திருவாபரண பவனியானது வரும் 15ஆம் தேதியன்று சபரிமலை சன்னிதானத்திற்கு வந்து
சேரும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் காலமான
அதிகாலை 2.40 மணிக்கு மகர சங்கம பூஜை நடைபெறும். மன்னர் குடும்பத்தில் இருந்து
நெய், தேங்காய் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும். 15ஆம் தேதி திருவாபரண
பெட்டி சரங்குத்தி வந்த உடன் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு,
சன்னதிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
இதனையடுத்து, ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் மாலையில், சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியையும், அந்த நேரத்தில் வானில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தையும் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
மேலும் 14ஆம் தேதி 50,000 பேருக்கும், 15ஆம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி
தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.