அமெரிக்காவில் கப்பல் மோதி பால்டிமோர் பாலம் உடைந்து விபத்து | பதைபதைக்க வைத்த காட்சிகள்!
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் ஏராளமான கார்கள் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
பாலத்தின் மீது தெரிந்த விளக்கு வெளிச்சம் அதன் மீது வாகனங்கள் சென்றது என்பதைக் காட்டுகிறது. மூன்றாவது பாலத்தின் மீது கப்பல் மோதியதில் பாலத்துடன் சேர்ந்து அந்த வாகனங்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்குவதும் காட்சியில் தெரிகிறது. இந்த விபத்தில் ஏறத்தாழ 20 பேர் நீருக்குள் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து பால்டிமோர் தீயணைப்புத் துறையின் கெவின் கார்ட்விர்ட்ஜ் கூறுகையில், "தண்ணீருக்குள் பல வாகனங்களும், ஒரு டிராக்டரும் மூழ்கி இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விபத்தில் மொத்தப் பாலமும் சரிந்துவிட்டது. தற்போதயை நிலையில் சுமார் 20 பேர் மற்றும் பல வாகனங்கள் ஆற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சுகிறோம்” என்று தெரிவித்தார்.
பால்டிமோர் நகர மேயர் கூறுகையில், “விபத்து குறித்து தகவல் கிடைத்தது. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.
இதனிடையே, எம்டிடிஏ (மேரிலேண்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி) தனது எக்ஸ் பக்கத்தில், "சரக்கு கப்பல் மோதியதால் ஐ-695 பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் மரைன் டிராஃபிக் இணையதளத்தில், சிங்கப்பூரின் கொடியுடன் கூடிய டாலி என்ற சரக்கு கப்பல் பாலத்தின் கீழே நிற்பது தெரிகிறது.