கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு! - சுகாதாரத் துறை தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இவ்வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். சமீப காலமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த மே மாதம் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4834 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 12-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 5,554 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.