வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், விரைவில் நிலைமை சீரடையும் -முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், விரைவில் நிலைமை சீரடையும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பிலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், விரைவில் நிலைமை சீரடையும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள அவர், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை ஓய்வின்றி உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.