“வருகின்ற தேர்தல்களில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - டிடிவி தினகரன்.!
“வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில், திமுகவிற்கு நல்ல பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் எஸ். பாண்டியம்மாளின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது..
” தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க வேண்டும் என்றால் மத்திய அரசோடு மாநில அரசு சமூக உறவு இருந்தால் மட்டுமே முடியும். திராவிட மாடல் என்று சொல்லி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைக்கு மத்திய அரசின் தயவு வேண்டும் என்ற காரணத்தினால் பல்வேறு வேசங்களை போடுவதாக தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
தேர்தலில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற திமுகவிற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். கமிட்டி அமைத்து இருக்கிறார்கள். அந்த சூழ்நிலை உருவாகுமா என்பது தெரியவில்லை. தேர்தலுக்கு முன்னர் கூட்டணி விவரங்கள் தெரிய வரும் என அவர் தெரிவித்தார்.