Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

37-ஆம் ஆண்டில் பாமக ... வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம் - அன்புமணி ராமதாஸ்!

37-ஆம் ஆண்டில் பாமகவின் வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம் என்று பானக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11:37 AM Jul 11, 2025 IST | Web Editor
37-ஆம் ஆண்டில் பாமகவின் வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம் என்று பானக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16 ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகத்தான தருணத்தில் இம்மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பிய மருத்துவர் ராமதாஸுக்கு வணக்கங்களையும், உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நினைவுக்கு வருவது சமூகநீதியும், மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தான். 36 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிப் போராளி மருத்துவர் ராமதாஸால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே அனைத்து மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களின் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்; இழந்த உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த பாதையில் தான் நமது பயணம் தொடருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் நம்மால் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாகவும், வருத்தமாகவும் இருந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் தான் நமது மனதிற்கு நிறைவைத் தருகின்றன. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20% இட ஒதுக்கீடு, 10.50% வன்னியர் இடஓதுக்கீடு, 3.50% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.50% இட ஒதுக்கீடு என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான். இவற்றில் இரு இட ஒதுக்கீடுகளை மருத்துவர் ராமதாஸ் வழிகாட்டுதலில் வென்றெடுத்தவன் என்பதை எனது சமூகநீதிப் பயணத்தில் கிடைத்த சான்றிதழ்களாக நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

சமூகநீதி சாதனைகளையும் கடந்து, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது, வேளாண் விளைநிலங்களை தொழில் பயன்பாட்டுக்காக கையகப்படுத்துதைத் தடுத்தது, பல கட்டப் போராட்டங்களை நடத்தி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் கொண்டு வரச் செய்தது, போதைப் பொருள்களின் நடமாட்டம் மற்றும் மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருவது, மின்கட்டண உயர்வுக்கு எதிராகவும், உழவர்களுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலை கிடைப்பதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி இடைவிடாமல் போராடி வருகிறது.

தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெற்றுக் கொடுக்கும் நிலையிலேயே தொடர முடியாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கம்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்திற்காகத் தான் நாம் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். வலிமையான சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைத்தல் ஆகிய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த மே 30ஆம் தேதி அந்தப் பணிகள் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே பேரெழுச்சி காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் சமூகநீதிக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்காகவும் நாம் நடத்திய போராட்டங்கள், படைத்தசாதனைகள், மத்திய அரசில் அங்கம் வகித்ததன் மூலம் மருத்துவத் துறையிலும், தொடர்வண்டித் துறையிலும் பாட்டாளி மக்கள் ஆற்றிய பணிகள், தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்க வேண்டும்.

இவை அனைத்தையும் விட தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. அதனால் தான், 1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice), 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை (Women's Right to Live Free from Violence) 3. வேலைக்கான உரிமை (Right to Employment) 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food) 5. வளர்ச்சிக்கான உரிமை (Right to Development) 6.அடிப்படை சேவைகளுக்கான உரிமை (Right to Public Services), 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education) 8. மது&போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm) 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை (Right to Sustainable Urban Development) 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment) ஆகிய 10 உரிமைகளை தமிழக மக்களுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளான ஜூலை 25ஆம் நாள் முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

இவை எதுவுமே தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இவை அனைத்தும் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பதற்கான செயல்திட்டத்தின் அம்சங்கள் தான். தமிழ்நாட்டைக் காப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் எனும் நிலையில், இவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய முதன்மைச் செயலாகும். அதுவே திமுக அரசை அகற்றுவதற்கான தொடக்கமாகட்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு தொடக்கவிழாவை, அனைத்துக் கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பாமக கொடியேற்றி கொண்டாட வேண்டும். இந்த நாளில் தொடங்கி 9 மாதங்களில் நாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள், மக்களை வதைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38ஆம் ஆண்டு விழாவை ஆளும் கூட்டணிக் கட்சியாக கொண்டாடுவதற்கு தொடக்கவுரை எழுதும் வகையிலும் அமைய வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம். இது உறுதி". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anbumani RamadossJourneyPMKpmkanbumaniRamadoss
Advertisement
Next Article