ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை உடைந்து வெளியேறிய கழிவுநீர்; பொதுமக்கள் அவதி....
ராமநாதபுரம் நகராட்சியின் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து சாலைகளில் கழிவுநீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, மலேரியா டெங்கு உள்ளிட்ட நோய்களால் அவதிக்குள்ளாகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் 33 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் பாதாள
சாக்கடை திட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் சாக்கடை குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், சாக்கடை கழிவுநீர் தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்து
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்கள் என எவரும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு மலேரியா போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து நகராட்சி கவுன்சிலர்களிடமும், அதிகாரிகளிடமும் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
சுகாதார சீர்கேடாக நகராட்சி பகுதிகள் முழுவதும் உள்ளன. முதல் கட்டமாக அனைத்து வார்டுகளிலும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.
இல்லையேல் சாலை மறியல் மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்டமான போராட்டங்களில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.