நெல்லை அருகே கட்டுக்கட்டாக கள்ள நோட்டு: போலீசாரிடம் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகன தணிக்கையின் போது, ரூ.75.93 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்
காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக
நாகர்கோவில் நோக்கி வந்த TN 39 CF 5054 என்ற எண் கொண்ட காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது காரில் அளவுக்கு அதிகமாக பணம் இருந்ததை கண்டறிந்த காவல்துறையினர் அது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
வாகனத்தில் வந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த
சீமைச்சாமி, கோபாலகிருஷ்ணன், தென்காசி மாவட்டம் கோதை நாச்சியார் புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர் என்பவரையும் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் உள்ளிட்ட நான்கு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான பணம் கள்ள நோட்டுகள் என்பது விசாரணையிலும், சோதனையிலும் தெரிய வந்தது. தொடர்
விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய கார் போலி எண் கொண்டது என்றும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 8 செல்போன்கள், 1 அரிவாள், 1 கத்தி மற்றும் ரூ.1,13,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விரிவான
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.