ரூ.10 கோடி ஊழல் செய்யும் முதலமைச்சர்கள் கைது.. ஆனால் ரூ.2000 கோடி ஊழல் செய்த அதானி? – ராகுல் காந்தி கேள்வி!
“இந்தியாவில் ரூ.10 கோடி ஊழல் செய்யும் முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ரூ.2000 கோடி ஊழல் செய்த அதானி சுதந்திரமாக சுற்றி வருகிறார்” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 - 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம் அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் உள்பட 7 பேரின் மீதும் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.
இந்நிலையில் அதானி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
அமெரிக்கா மற்றும் இந்தியா என இருநாட்டு சட்டங்களையும் அதானி உடைத்துள்ளார் என்பது அமெரிக்காவில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் அவர் கைது செய்யப்படாமல், நாட்டில் சுதந்திரமாக சுற்றுவதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறோம். இதன்மூலம் நாங்கள் கூறியதும் நிரூபணம் ஆகியுள்ளது.
பிரதமர் அதானியை பாதுகாக்கிறார். இதன்மூலம் பிரதமரும் அதானியுடன் ஊழலில் ஈடுப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் அதானிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ரூ.10 முதல் 15 கோடி வரை ஊழல் செய்யும் முதலமைச்சர்கள் இங்கு சிறையில் அடைக்கப்படுகின்றனர். ரூ.2000 கோடி ஊழல் செய்த அதானி சுதந்திரமாக சுற்றி வருகிறார். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
மேலும் அதானியின் பாதுகாவலரான மாதபி பூரி புச் மீது நடவடிக்கை எடுக்காததற்கான விசாரணையும் நடத்தப்பட வேண்டும். வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலும் கௌதம் அதானியின் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்படும்” என கூறினார்.