For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜெர்மனியை உலுக்கிய போராட்டம் - டீசல் மானியம் ரத்தை கண்டித்து கொதித்தெழுந்த விவசாயிகள்!

05:20 PM Jan 09, 2024 IST | Web Editor
ஜெர்மனியை உலுக்கிய போராட்டம்   டீசல் மானியம் ரத்தை கண்டித்து கொதித்தெழுந்த விவசாயிகள்
Advertisement

ஜெர்மனியில் டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்நாட்டு விவசாயிகள் டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் உட்பட பல நகரங்களில் விவசாயிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு டீசல் மானியம் மற்றும் வரி விலக்கை ரத்து செய்யும் அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பல இடங்களில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு "ஜெர்மன் விவசாயிகள் சங்கம்" நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.  பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் நெடுஞ்சாலையை மறித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வடமேற்கு ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பர்க் நகரின் காவல்துறை, "வாகனப்பாதைகளைத் தடுப்பது ஒரு குற்றம்" என்று ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக, கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஏராளமான விவசாயிகள் பெர்லினுக்கு வரத் தொடங்கினர். அங்கு, வரலாற்று சிறப்புமிக்க பிராண்டன்பர்க் கேட் அருகே விவசாயிகள் ஏராளமான டிராக்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர். வழக்கமாக இன்று (ஜன. 9) காலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் டிராக்டர்களால் மூடப்பட்டு, விவசாயிகள் சங்கு ஊதி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

காலை 10 மணி நிலவரப்படி, 566 டிராக்டர்கள், டிரக்குகள், வண்டிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக பெர்லின் போலீசார் தெரிவித்தனர். நாடு முழுவதும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியில் பல இடங்களில் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் முழுவதும் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடரும் என்றும் ஜனவரி 15-ம் தேதி பெர்லினில் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Advertisement