கடலூரில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து - பயணிகள் படுகாயம்!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து சர்வீஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் அபாயகரமான பகுதியாக உள்ளது.
இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த 3 தனியார் சொகுசுப் பேருந்துகள் அதிகாலை 4 மணியளவில் நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து சர்வீஸ் சாலைக்கு செல்ல முற்பட்டது. அப்போது முன்னால் சென்ற தனியார் பேருந்து பிரேக் பிடித்ததால் இதை சற்றும் எதிர்பார்க்காத மற்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடலில் தலை, கை, கால், உடல்பகுதி என பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களை வேப்பூர், பெரம்பலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.