ஒரு ஆணின் எழுத்துக்களில், பெண் கதாப்பாத்திரம் முழுமையாக எழுதப்பட்டது 'பருத்திவீரன்’ படத்தில் தான் - இயக்குநர் சுதா கொங்கரா பதிவு!
ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது ’பருத்திவீரன்’ படத்தில் தான் முதல் முறை என இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அத்திரைப்படத்தை இயக்கிய அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளானது. இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து பருத்திவீரன் திரைப்படம் உருவாக பண உதவியளித்த இயக்குநர் சசிகுமாரும், இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் 'பருத்திவீரன்' படத்தின் இயக்குநர் அமீர் குறித்து திடீரென்று 'சூரரைப்போற்று' இயக்குநர் சுதா கொங்கரா கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் பதிவில்,
‘’பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது.. நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.. எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்.. நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்.. என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று.
ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை.. இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி’’ எனப் பதிவிட்டுள்ளார்.