இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.
மேலும் தனது ரகசியக் காப்புறுதியை மீறி அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தபோது அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகளில் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.