“குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானதாக இருக்கும்” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு அரசியலில் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானதாக இருக்கும். மேலும் தகுதி நீக்கத்திற்கான தற்போதைய காலமாக இருக்கும் ஆறு ஆண்டுகள், அவர்களின் குற்றத்தை உணர செய்ய போதுமானதாக இருக்கும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும்,“வாழ்நாள் தடை பொருத்தமானதா, இல்லையா என்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கேள்வி. தகுதி நீக்கம் செய்வதற்கான காலக்கெடுவை “விகிதாசாரம் மற்றும் நியாயத்தன்மையின் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு” அவை முடிவு செய்கிறது”. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.