கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "கவாச் கவசம் திட்டம் "எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 வாரங்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 200க்கும் அதிகமானோர் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதுபோல ரயில் விபத்துகள் எதிர்காலத்தில நிகழாத வகையில், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் "விஷால் திவாரி" என்ற வழக்கறிஞர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசரணை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “எனது மாணவ குடும்பமே...!” - பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை
மனுதாரர் தரப்பில் கூறியதாவது; "ரயில் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு உடனடியாக ரயில் சேவைகளின் பாதுகாப்பு தன்மையை வலுப்படுத்த வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு அந்த குழு பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து தங்களது பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு செயல்படுத்த உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவாச் கவசம் திட்டம் உள்ளிட்டவை எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை நான்கு வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும்" என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.