Impact Player Rule - கோலி.. ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக #ZaheerKhan கருத்து!
இம்பாக்ட் பிளேயர் விதி குறித்த ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் கருத்துக்கு எதிராக ஜாகிர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார்.
அணியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
45 வயதாகும் ஜாகிர் கான் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், ஜாகிர் கான் இந்தியா 2011-ல் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஜாகீர் கான் தெரிவித்ததாவது..
"இம்பாக்ட் பிளேயர் விதி மிகவும் மோசமாக இல்லை என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அது நமது திறமைக்கு இன்னும் கொஞ்சம் மதிப்பு அளிக்கிறது. இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிராக பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. இந்த விதி இந்தியாவில் உள்ள திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.” என ஜாகிர் கான் தெரிவித்தார்.
இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஜாகீர் கான் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.