“அவதூறு வீடியோக்கள், பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்” - ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்!
அவதூறு வீடியோக்கள் மற்றும் தவறான பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் விடுத்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் -சாய்ரா தம்பதியினர் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதையும் படியுங்கள் : ஜார்க்கண்ட் தேர்தல் | “மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இது தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை - தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது மகன் அமீன் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதைதொடர்ந்து தற்போது தன்னை பற்றி அவதூறு வீடியோக்களை பதிவிடுபவரை சட்டபடி தண்டிக்கப்படுவர் என ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் அதிகார நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும்" என கூறியுள்ளார். அப்படி அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டபூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.