"கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன்" - உருவ கேலி செய்த #DonaldTrump
அமெரிக்க அதிபர் தோ்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிஸைவிட தான் அழகானவன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, டைம்ஸ் பத்திரிகை அட்டையில் கமலா ஹாரிஸின் படம், புகைப்படமாக அல்லாமல் கையால் வரையப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப் :
"டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் கமலா ஹாரிஸின் நல்ல புகைப்படம் ஏதும் இல்லை என்று தெரிகிறது. ஆனால், அவா்களிடம் சிறப்பான ஓவியக் கலைஞா் உள்ளார். கமலா ஹாரிஸின் உண்மையான தோற்றத்தைவிட சிறப்பாக இருப்பதுபோல அந்த அட்டைப் படம் வரையப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸை செய்தி புகைப்படக் கலைஞர்கள் பலர் படம் எடுத்திருப்பார்கள். ஆனால், பத்திரிகையில் வெளியிடும் அளவுக்கு அவை நன்றாக இருந்திருக்காது. எனவேதான் படத்தை வரைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்"
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள் : #UGCNET Exam : முதல் மூன்று தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தோ்வுகள் முகமை!
அடுத்த இரண்டு மணி நேரத்தில் மற்றொரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், "நான் கமலா ஹாரிஸைவிட அழகானவன்" என்று குறிப்பிட்டார். இதன்மூலம் கமலா ஹாரிஸை உருவ கேலி செய்வதை அவர் மீண்டும் தொடா்ந்துள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரீஸ் ஆப்பிரிக்க-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். டிரம்ப் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர். எனவே, இது இனரீதியான தாக்குதல் பேச்சாகவும் கருதப்படுகிறது.