நிலவில் தரையிறங்கிய ஒடிஸியஸ் லேண்டரின் சிக்னல் கிடைக்கவில்லை! - நாசா தகவல்
IM - 1 விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், அதிலிருந்து சிக்னல் சரிவர கிடைக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட IM - 1 விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் பிப்.15-ம் தேதி அதிகாலை 1:05 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து SpaceX Falcon 9 ராக்கெடின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, பிப்.21-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஒடிஸியஸ் லேண்டர் அடைந்தது. இதன்மூலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இன்டியூடிவ் மிஷின்ஸ் படைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
பிப்.21-ம் தேதி மாலை 06.23 மணியளவில் ஒடிஸியஸ் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக நாசா நிறுவனம் தகவல் தெரிவித்தது. ஆறு கால்களை கொண்ட ஒடிஸியஸ் லேண்டர், ‘நோவா- சி’ என்ற வகையைக் சார்ந்தது. 1972 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 17 நிலவை எட்டிய பிறகு, நிலவின் மேற்பரப்பில் தரையிங்கிய முதல் அமெரிக்க விண்கலம் என்ற சாதனையை IM - 1 விண்கலம் பெற்றுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, நாசாவின் ஒடிஸியஸ் லேண்டர் தரையிறங்கியுள்ளது. சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 2023-ல் நிலவின் மேற்பரப்பை பாதுகாப்பாக அடைந்தது குறிப்பிடத்தக்கது.