மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!
மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு, இளையராஜா தரப்பில் இருந்து அவருடைய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…’ சமூக வலைதளங்களில் தற்போது இந்த பாடல்தான் ட்ரெண்டிங். காரணம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம். மலையாளத்தில் வெளியாகி, கேரளாவை விட தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், தமிழ்நாட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னணி நடிகர்களோ, பெரிய விளம்பரமோ இல்லாமல், ஒரு மலையாள படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பிரம்மாண்டமாக ஓடி வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்த்ததில்லை.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘மஞ்சும்மல்’ என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறது. அதில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் கதை.
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இது தமிழ் ரசிகர்களுடன் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கனெக்ட் ஆக பெரிதும் உதவியது. ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. ஒரு புறம் தியேட்டர்களில் ஹீரோவாக வலம் வரும் இப்படம், ஓடிடி ரிலீஸிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில் அனுமதியின்றி 'குணா படப்பாடலை' பயன்படுத்தியதாக கூறி, மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குணா படத்தில் வரும் அந்த பாடலை உருவாக்கியவர் என்ற முறையில், பதிப்புரிமை சட்டப்படி தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அந்த நோட்டீசில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.