“நாங்கள் நிறைய பேசினோம்” - பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!
இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் வேலியண்ட் சிம்பொனியை கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். சிம்பொனி அரகேற்றத்திற்கு முன்னதாக திமுக, அதிமுக, பாஜக, விசிக, நாதக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இளையராஜாவை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். அதேபோல் அவர் சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தன்னை வழியனுப்பியதற்காக முதலமைச்சர் மு.க.ஸடாலினை நேரில் சந்தித்து இளையராஜா நன்றி கூறினார். அந்த சந்திப்புக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் மோடி உடனான மறக்க முடியாத சந்திப்பு . நாங்கள் நிறைய பேசினோம். அதில் என்னுடைய வேலியண்ட் சிம்பொனியும் அடங்கும். அவரது பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.